டூரிஸ்ட் பேமிலி அபிஷன் போல் முதல் படமே ஹிட் கொடுத்த முத்தான 3 இளம் இயக்குனர்கள்!
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ளார். அவரைப்போல் முதல் படத்தில் ஹிட் கொடுத்த இளம் இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம்.

Abishan Jeevinth Debut With Blockbuster Hit Movie
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அப்படி கிடைத்தாலும் முதல் படத்திலேயே தன்னை நிரூபித்துக் காட்டினால் தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியும். அந்த வகையில் தற்போது கோலிவுட்டில் புதுவரவாக வந்துள்ளவர் தான் அபிஷன் ஜீவிந்த். இவர் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ள அபிஷன், இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை. இவருக்கு வயது வெறும் 25 தான். திருச்சியை சேர்ந்த இவர் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். கமலின் தெனாலி படத்தை ஒரு ஐடியாவாக வைத்துக் கொண்டு தான் டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கி இருக்கிறார் அபிஷன். இவரைப் போல் இளம் வயதில் சினிமாவுக்குள் வந்து சாதித்த மூன்று முத்தான இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம்.
பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan)
இன்று கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை இயக்கும் போது அவருக்கு வெறும் 24 வயது தான். அவரின் திறமையை நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் ஜெயம் ரவி. அதை முதல் படத்திலேயே நிரூபித்து காட்டி வெற்றிகண்ட பிரதீப், அடுத்தடுத்து லவ் டுடே, டிராகன் என ஹீரோவாக மாறி கலக்கி வருகிறார்.
கார்த்திக் நரேன் (karthick naren)
கோலிவுட்டுக்கு கிடைத்த மற்றுமொரு திறமையான இளம் இயக்குனர் தான் கார்த்திக் நரேன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தை இயக்கும் போது கார்த்திக் நரேனுக்கு வெறும் 20 வயது தான். இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு செம திரில்லிங் படமாக துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி வெற்றிகண்ட கார்த்திக், அடுத்ததாக நரகாசூரன் என்கிற படத்தை இயக்கினார். அது ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் அருண் விஜய் நடித்த மாஃபியா, தனுஷின் மாறன் போன்ற படங்களை அவர் இயக்கினார்.
அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu)
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றுமொரு திறமையான இயக்குனர் தான் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர் டிமாண்டி காலனி என்கிற தரமான படத்தை கொடுத்து கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதுவரை வந்த பேய் படங்களில் இருந்து அது தனித்து இருந்ததால் கவனம் ஈர்த்தார் அஜய் ஞானமுத்து. பின்னர் இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமாண்டி காலனி 2 போன்ற படங்களை இயக்கினார் அஜய்.