ஏமாற்றத்தை கொடுத்த 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி! 4000 பேருக்கு பணத்தை திருப்பி அனுப்பிய AR ரகுமான்!
ஏ.ஆர்.ரகுமான் நடத்திய, 'மறக்கமா நெஞ்சம்' நிகழ்ச்சி, குளறுபடிகளால் 4000 பேர் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கியும், கண்டு களிக்காத நிலையில், அவர்கள் அனைவர்க்கும், ஏ.ஆர்.ரகுமான் டிக்கெட்டுக்காக பணத்தை திருப்பி செலுத்தி உள்ளார்.

ஆஸ்கர் விருது வாங்கி, தமிழகத்திற்கே பெருமை சேர்த்த இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்கிற பெயரில் மியூசிக் கான்செர்ட் ஒன்றை, கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடத்த திட்டமிட்ட நிலையில், அப்போது மழை காரணமாக அந்த நிகழ்ச்சி தடைப்பட்டது. எனினும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில், இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில், 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை நேரில் காண ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலர் அந்த மைதானத்தில் கூடினர்.
ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் தவறால், ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிகள் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். காரணம் மிகவும் சிறிய இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் நிகழ்ச்சியை காண ஆவலோடு காத்திருந்த பல ரசிகர்கள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் கூட்ட நெரிசலால் பல பெண்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். வயதானவர்கள் பலர் கால் வலி தாங்காமல் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என டிக்கெட்டை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றனர். அதேபோல் இந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, சிலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவலங்களும் அரங்கேறியது. இது குறித்த தகவல்கள் X சமூக வலைதளத்தில் தீயாகப் பரவ, பலர் கொந்தளித்தனர். மேலும் ஏ ஆர் ரகுமான் மீது கடும் விமர்சனங்களை வாரி வாரி இறைத்தனர்.
இந்த தவறுக்கு தான் யாரையும் கை காட்டவில்லை என ஏ.ஆர்.ரகுமான் கூற, இந்த குளறுபடிகளுக்கு காரணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் தான் என்பதை அவர்களே ஓபனாக ஒப்புக்கொண்டனர். மேலும் ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய நிகழ்ச்சியைக் காண டிக்கெட்டுகள் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள், தங்களுடைய டிக்கெட்டை காப்பி எடுத்து தனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பும் படியும்... அவர்களுக்கு அந்த டிக்கெட்டுக்கான பணம் திரும்ப கொடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி சுமார் 4000 பேர் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை காப்பி எடுத்து அனுப்பியதாகவும், அந்த 4000 பேருக்கும் அவர் மீண்டும் பணத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.