மில்லியன் நன்றிகள் போதாது! பிரபலத்துடன் இருக்கும் 'லியோ' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் உருக்கமாக பிரபலத்துடன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தளபதி விஜய் நடிக்கும் 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக்கி வரும் இந்த படத்தில், தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும், இருக்கும் மிஷ்கின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
'லியோ' படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்ற இயக்குனர் மிஷ்கின், படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்ததாக ட்விட்டரில், அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். அந்த அறிக்கையில்' "காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.
என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என மிஷ்கின் தெரிவித்திருந்தார்".
இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கினின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "அன்புள்ள மிஷ்கின் சார் உங்களுடன், இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றதற்கு நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவராக உருகுகிறேன் உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் போதாது. நீங்கள் படபிடிப்பில் இருந்ததால் எங்களுக்கு ஒரு முழுமையான பலம் இருந்தது போல் உணர்ந்தோம். நான் உங்களுக்கு ஒருபோதும், போதுமான நன்றி சொல்ல முடியாது. ஆனால் ஒரு மில்லியன் நன்றி என பதிவிட்டுள்ளார்".