Aparna Vastarey : பெங்களூரு மெட்ரோ ரயில்களில் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரரான நடிகை அபர்ணா காலமானார்!
கன்னட நடிகையும், தொகுப்பாளருமான அபர்ணா வஸ்தரே நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட நடிகையும் , தொலைக்காட்சி தொகுப்பாளரும், முன்னாள் ரேடியோ ஜாக்கியுமான அபர்ணா வஸ்தரே நேற்றிரவு காலாமனார். அவருக்கு வயது 57. அபர்ணா கடந்த இரண்டு ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது கணவர் நாகராஜ் வஸ்தரே தெரிவித்தார்.
டி.டி. சந்தனாவில் தொகுப்பாளராகப் பணியாற்றிய அபர்ணா பல அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். முதலாமனே மற்றும் முக்தா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் அவர் நடித்துள்ளார். அவரின் நேர்த்தியான கன்னட மொழி உச்சரிப்புக்காகவே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
விருதுகளை வாரிக்குவித்த ஆர்ஆர்ஆர்.. சீதா ராமம்.. சிறந்த நடிகர் யார்? ஜூனியர் என்டிஆர் Vs ராம் சரண்?
1998 ஆம் ஆண்டில், தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எட்டு மணிநேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை வழங்கி சாதனை படைத்தார் அபர்ணா வஸ்தரே. அவர் சின்னத்திரை கிடைத்த புகழ் மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமானார். 1984 ஆம் ஆண்டு மசானட ஹூவு’ மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். இன்ஸ்பெக்டர் விக்ரம்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார்.
விவித் பாரதியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய அவர், பெங்களூருவின் நம்ம மெட்ரோ அறிவிப்புக்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். கன்னட சின்னத்திரையின் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான 'மஜா டாக்கீஸ்' இல் 'வரலக்ஷ்மி' என்ற பாத்திரம் மக்களால் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் சித்தராமையா உட்பட பல திரைப்பட, தொலைக்காட்சி, இலக்கியம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபர்ணா வஸ்தரேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் அபர்ணா வஸ்தரேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான அபர்ணாவின் மரணச் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கன்னடத்தின் முக்கிய சேனல்கள் மற்றும் அரசு விழாக்களில் மிக நேர்த்தியாக கன்னட மொழியில் பேசி நம்மை கவர்ந்தவர். மாநிலம் முழுவதும் பிரபலமான பன்முகத் திறமையாளர் மிக விரைவிலேயே நம்மை விட்டுப் பிரிந்தார். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.