நடிகர் கமல்ஹாசன் மலைபோல் நம்பி இருந்த தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தன்னுடைய அடுத்த பட இயக்குனரை கமல் மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kamalhaasan Next Movie Update

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவர் தான் கமல்ஹாசன். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி பிளாப் ஆனது. அப்படத்தின் தோல்விக்கு பின் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கமல்ஹாசன், அதற்காக தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். நாயகன் படத்தின் வெற்றிக்கு பின் இருவரும் 37 ஆண்டுகள் கழித்து கூட்டணி சேர்ந்துள்ள படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது. அதுமட்டுமின்றி இதில் கமலுடன் சிம்புவும் நடித்திருந்ததால் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தக் லைஃப்பும் இருந்தது.

படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5-ந் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதோடு இப்படத்தை நெட்டிசன்கள் சரமாரியாக ட்ரோல் செய்தனர். மணிரத்னமா இப்படி ஒரு மொக்கை படத்தை எடுத்தார் என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் கெரியரில் கடும் நஷ்டத்தை சந்தித்த படமாகவும் தக் லைஃப் மாறியது. இப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்திலேயே தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டது. தற்போது குபேரா படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் தக் லைஃப் படம் வாஷ் அவுட் ஆகி இருக்கிறது.

தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே தன்னுடைய 237-வது படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்குவார்கள் என அறிவித்திருந்தார் கமல்ஹாசன். மேலும் அப்படத்தை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அமெரிக்காவில் தொடங்கினர். இதனால் இது தான் கமலின் அடுத்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தக் லைஃப் படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய அடுத்த பட இயக்குனரை கமல் மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமலின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருக்கு சென்று இருக்கிறதாம். இவர் தமிழில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இந்த ஆண்டுக்குள் நடித்து முடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். இதில் நடித்து முடித்த பின்னரே அன்பறிவு இயக்கும் படத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம் கமல். அன்பறிவு இயக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தான் தொடங்க உள்ளதாம்.