தக் லைஃப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசன் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். படம் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையையும், மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாக செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.
நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், தக் லைஃப் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக துபாய்க்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டதாகவும், அதற்கான பல ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது சென்னையிலிருந்து மலேசியா வழியாக துபாய்க்குச் செல்ல திட்டமிட்டு உள்ளார். ப்ரோமோஷன் நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பி வருவதாகவும் கூறினார்.

மாநிலங்களவையில் தமிழகத்தின் குரல்
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், மாநிலங்களவையில் தமிழர்களின் பாரபட்சமற்ற குரல் ஒலிக்க வேண்டுமென்றும், மையத்தின் குரலாகவும், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தும் குரலாகவும் செயல்படுவதாக கூறினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்
தளபதி விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்வி எழுந்த போது, கமல்ஹாசன் நேரடியாக விமர்சிக்காமல், தானும் புதிய கட்சியை சேர்ந்தவராக இருப்பதால் மற்ற புதிய கட்சிகளை விமர்சிக்க இயலாது என சமாதானமாக பதிலளித்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
