டைகர் அட்டாக்கில் கணவரை இழந்த பெள்ளி.. பொம்மனிடம் உள்ள அபார திறமை! எலிபென்ட் விஸ்பரர்ஸ் குறித்து DFO வெங்கடேஷ்
சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இது குறித்து முதுமலை காப்பகத்தின் DFO வெங்கடேஷ் அவர்கள், ஏசியா நெட் தளத்திற்கு கொடுத்துள்ள பிரத்தேயேக பேட்டி இதோ...
அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.
தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்நிலையில் தான் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’.
இந்நிலையில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட முதுமலை காப்பகத்தின் DFO வெங்கடேஷ் அவர்களை தொடர்பு கொண்டு, இந்த குறும்படம்... குறித்தும் யானைகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பொம்மன் - பெள்ளி குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' படத்தை இயக்கிய கார்த்திகி, அடிக்கடி இங்கிருக்கும் கேம்ப்புக்கு வந்து செல்பவர். அதனால் இங்கு யானை குட்டிகள் வந்திருப்பதை அறிந்து கொண்டு, உரிய அனுமதி பெற்றே இந்த ஆவணப்படத்தை எடுத்தார். அவர் ஊட்டியை சேர்ந்தவர் என்பதால், யானைகள் மற்றும் யானை குட்டிகள் பற்றி ஏற்கனவே தெரியும் என கூறினார். பொதுவாக யானை குட்டிகள் அதிகம் இருப்பது தருமபுரி மற்றும் சத்தியமங்கலம் காப்பகங்களில் தான். ஆனால் இங்கு தற்போதைக்கு 2 யானை குட்டிகள் மட்டுமே உள்ளது. அதில் ஒன்னு தான் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகு. ஏற்கனவே இங்கு குட்டியாக வந்தவை பெரிதாக வளர்ந்து விட்டது.
இந்த ஆவணப்படத்தை எடுக்க எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது , 3 முதல் நான்கு மாதங்கள் எடுத்து கொண்டனர். இங்கு உள்ள கேம்ப் பகுதிகளில் பெருபாலான காட்சிகளை படமாக்கினர். எங்கள் தரப்பில் இருந்தும் சில ஊழியர்கள் அவர்களுக்கு உதவினார்கள். இந்த படத்தின் மூலம், முதுமலை காப்பகத்தில் குட்டி யானைகள் எப்படி பராமரிக்க படுகிறது என்பது, மக்களுக்கு தெரிய வந்துள்ளது என பெருமையோடு தெரிவித்துள்ளார்.
முதுமலை காப்பகத்தில் இருந்த யானை குட்டிகளை பிள்ளைகள் போல் பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி குறித்து கேள்வி எழுப்பிய போது... பொம்மன் எங்கள் ஊழியர்களில் ஒருவர். மிக விரைவாக அவர் யானை மற்றும் குட்டிகளுடன் பழகி விடும் அபார திறமை கொண்டவர். சமீபத்தில் கூட, தருமபுரியில் பிறந்து சில தினங்களே ஆன யானை குட்டியை 3 தினங்களாக நான், பொம்மன் ஆகியோர் கையிலேயே வைத்து கொண்டு சுற்றினோம். குட்டியின் தாயை கண்டு பிடித்து விட்டாலும் மற்ற யானைகள் எங்களை கிட்டே வர விடவில்லை. பொம்மன் தான் தைரியமாக குட்டியை தாயிடம் கொண்டு போய் விட்டு விட்டு வந்தார்.
பெள்ளி சில வருடங்களுக்கு முன், புலி தாக்கியதில் அவரின் கணவரை இழந்து விட்டார். பெள்ளி மலை வாழ் மக்கள் என்பதை, யானை பராமரிப்பு குறித்து அவருக்கு நன்கு தெரியும். எனவே எங்களின் தற்காலிக ஊழியராக பொம்மனுடன் இருந்து கொண்டு யானைகளை பாதுகாத்து வருகிறார். அதே போல் யானை ஊருக்குள் வந்து விட்டால் யானை மிகவும் ஆபத்தான விலங்கு என மக்கள் நினைத்து வந்த நிலையில், இந்த ஆவண படத்தின் மூலம்... யானைகள் எவ்வளவு அன்பானவை என்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். யானைகள் பாதுகாக்க கூடிய விலங்குகள் என தெரிவித்துள்ளார் DFO வெங்கடேஷ்.