ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ஜெயிலர்’ இரண்டாம் பாகம் 

ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘ஜெயிலர்’. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் சிறப்புத் தோற்றத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப், மோகன்லால் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ரஜினிக்கு வில்லனாகும் நாகார்ஜூனா

முதல் பாகத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் மற்றும் மருமகளாக நடித்த நடிகை மிர்னா இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கின்றனர். முதல் பாகத்தில் வில்லன் வேடத்தில் மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாகார்ஜூனா ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், அவர் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் சிவராஜ் குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.