விறுவிறுவென நடக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங்; எப்போ முடியும்? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்பது குறித்து ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.

Jailer 2 Movie Update :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் 2023ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில் போன்றோர் கெளரவ வேடங்களில் நடித்திருந்தனர். நடிகை தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார், ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தார். இப்படத்தை நெல்சன் இயக்கினார். இப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
ஜெயிலர் 2 அப்டேட்
'ஜெயிலர்' படத்தை தயாரித்த கலாநிதி மாறனே 'ஜெயிலர் 2' படத்தையும் தயாரிக்கிறார். முதல் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழு 'ஜெயிலர் 2' படத்திலும் பணியாற்றி வருகிறது. படத்திற்கு இசையமைத்து வெற்றிக்கு உதவிய அனிருத் ரவிச்சந்திரன் 'ஜெயிலர் 2' படத்திற்கும் இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு ஏற்கனவே கேரளாவில் தொடங்கிவிட்டது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் தெலுங்கு திரையுலக நட்சத்திரம் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் 2வில் கேமியோ யார்... யார்?
உண்மையில், 2023ல் வெளியான 'ஜெயிலர்' படத்திலேயே பாலகிருஷ்ணா கெளரவ வேடத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவரது கதாபாத்திரம் சரியாக இல்லை என்று இயக்குனர் நெல்சன் அவரது கதாபாத்திரத்தை நீக்கிவிட்டாராம். இந்த முறை பாலகிருஷ்ணாவை படத்தில் சேர்ப்பது உறுதி என்று கூறப்படுகிறது. இதுதவிர மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இதனால் பக்கா பான் இந்தியா படமாக ஜெயிலர் 2 தயாராகி வருகிறது.
ஜெயிலர் 2 ஷூட்டிங் எப்போது முடியும்?
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டிருப்பதாக கூறி உள்ள அவர், வருகிற டிசம்பர் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். இதனால் ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.