அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை தந்திருந்த போது அமெரிக்கர்கள் அதிக அளவில் இந்தியாவை குறித்து இணையதளத்தில்  தேடி உள்ள  தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  அவர்கள் அதிக அளவில் என்னென்ன தேடினார்கள் என்பது குறித்த சுவாரசியமான தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது .   அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று  முதல் முறையாக கடந்த 24 ஆம் தேதி இந்தியா வருகை தந்தார் ,  குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில்  தனது குடும்பத்தினருடன்  வந்த அவர்,  மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம், மற்றும்  ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச்  சென்று பார்வையிட்டார் .  அத்துடன் குடியரசு தலைவர் மாளிகையில் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது .

 

அதனைத் தொடர்ந்து எரிசக்தித் துறை மற்றும் பாதுகாப்பு துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது .  25 ஆம் தேதி இரவு குடியரசு தலைவர் மாளிகைகள் இந்திய பாரம்பரிய முறைப்படி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  இரவு விருந்து அளிக்கப்பட்டது . பின்னர் அன்றிரவே அமெரிக்கா திரும்பிய அவர் ,  இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது என தனது  டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க அவர் இந்தியா வருகை தந்தபோது ஏராளமான அமெரிக்கர்கள் சமூக வலைத்தளத்தில் இந்தியா குறித்து தேடலில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.  ட்ரம்ப் பயணத்தின்போது அமெரிக்கர்களும் இந்தியர்களும் கூகுளில் என்னென்ன விஷயங்களை தேடியுள்ளனர்  என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.   பெரும்பாலான அமெரிக்கர்கள்  கூகுளில் இந்தியா என்றால் என்ன.ழ  இந்தியா எங்கே இருக்கிறது என்று தேடி உள்ளது தெரியவந்துள்ளது. 

இது கூகுளின் டிரெண்ட் மூலம் தெரிய வந்துள்ள தகவலாகும் .  அதேபோல இந்தியா என்றால் என்ன.?  அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று அதிக அளவில் தேடப்பட்டுள்ளது .  அதே சமயம் ட்ரம்ப் வருகையின் போது இந்தியாவில் இருந்து அதிகமாக தேடப்பட்ட வார்த்தை என்னவென்றால் ,  ட்ரம்ப் தங்கியிருந்த  ஐடிசி மவுரியா ஹோட்டல் பற்றிதான்  ஏராளமான இந்தியர்கள் தேடியுள்ளனர் .  அடுத்த இடத்தில் ட்ரம்ப் பாகுபலி என்றும் தேடப்பட்டுள்ளது .  அதாவது ட்ரம்ஸ் வருகையின்போது பாகுபலி போல் சித்தரித்து வீடியோ வெளியானது .  பின்னர் அது நீக்கப்பட்டது அந்த வீடியோவை தான் இந்தியர்கள் பலரும் திரும்பத் திரும்ப தேடியுள்ளனர் . அதற்கு அடுத்த இடங்களில் ட்ரம்பின் குடும்பம் மற்றும் அவரது மகள் இவாங்கா குறித்த தேடல் இடம் பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது .