Rama Navami 2024 : அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய ஒளி நேரடியாக விழுந்த அரிய நிகழ்வு..

இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் பால ராமரின் நெற்றியின் மீது சூரிய ஒளி விழும் ‘சூரிய திலகம்’ என்ற அரிய நிகழ்வு நடைபெற்றது.

First Published Apr 17, 2024, 1:02 PM IST | Last Updated Apr 17, 2024, 1:02 PM IST

ராம நவமி என்பது விஷ்ணுவின் அவதாரமான ராமரின் பிறந்த நாளை குறிக்கும் பண்டிகையாகும். சைத்ரா மாதத்தின் 9-வது நாளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு, ராம நவமி ஏப்ரல் 17, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. நவமி திதி ஏப்ரல் 16 அன்று மதியம் 01:23 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 17 அன்று மாலை 03:14 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அயோத்தியில் பால ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய நிகழ்வு நடைபெற்றது. மதியம் 12:00 முதல் 12:05 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் ராமர் மீது விழுந்தது. ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் விழுந்த இந்த அரிய நிகழ்வை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

இதற்காக ரூர்கி ஐஐடி விஞ்ஞானிகள் ஒரு பிரத்யேக கருவியை வடிவமைத்தது. இதன் மூலம் சூரியக் கதிர்கள் ராமரின் நெற்றியில் பிரகாசித்தது. சுமார் நான்கு நிமிடங்களுக்கு 75 மி.மீ வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி விழுந்தது. பின்னர் ராமருக்கு ஆரத்தி மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.