Watch : கொரோனாவால் தனிமைப்படுத்தி உள்ள நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் : சுகாதாரத் துறை தகவல்!

கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், பொதுஇடங்களில் மாஸ்க அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

First Published Apr 8, 2023, 12:32 PM IST | Last Updated Apr 8, 2023, 12:32 PM IST

கோவை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பொது இடங்கள், திரையரங்குகள், அரசு மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா கூறியதாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் மட்டுமே அறிகுறிகளுடன் வருகின்றனர். மற்றவர்கள் அறிகுறிகள் அற்ற கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்பொழுது மாவட்டத்தில் 100 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 90% பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். முதல் நாள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதி செய்கின்றனர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் தனிமைப்படுத்தி கொண்ட நபர்களின் வீடுகள் நோட்டீஸ் ஒட்டுவதற்கு தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளில் ஓரிரு நாட்களில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்றார்.