கோவையில் வேகமாக பரவும் கொரோனா... அடுத்தடுத்து இருவர் பலியானதால் பரபரப்பு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் அடுத்தடுத்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயதான மூதாட்டி ஒருவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்... Watch : கொரோனாவால் தனிமைப்படுத்தி உள்ள நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் : சுகாதாரத் துறை தகவல்!
அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இப்படி அடுத்தடுத்து 2 மூதாட்டிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கடந்த ஏப்ரல் 5-ந் தேதியும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோவையில் கொரோனாவால் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் கோவையில் கொரோனா வேகமாக பரவி வருகிறதா என்கிற அச்சமும் எழுந்துள்ளது. கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தவும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த கொரோனா! பாதிப்பு புதிய உச்சம்! தமிழகத்தில் பாதிப்பு நிலவரம் என்ன?