கொடைக்கானலில் தற்போது ஜீரோ டிகிரி நிலவுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.

தற்போது குளிர்காலம் என்பதால் இந்தியா முழுக்கவே அதிக குளிர் நிலவி வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு கேரளா இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் மிதமான குளிர் இருந்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதை அடுத்து தமிழகத்தின் அதிலும் குறிப்பாக வட தமிழகத்தில் அதிக குளிர் வாட்டி வதைக்கிறது.

சென்னையிலும் அதிக குளிர் உணரமுடிகிறது நேற்று இரவு குறைந்தபட்சமாக வேலூரில் 13 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல். இதற்கிடையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடைக்கானலில் நேற்று ஜீரோ டிகிரியை தொட்டது. சென்ற வருடம் 7 டிகிரி வரை காணப்பட்டது. இப்படியே சென்றால் இன்று இரவு மைனஸை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் பெரும் அவஸ்தை அனுபவித்து வருகின்றனர். அதேவேளையில், வெளிநாட்டினருக்கு இந்த குளிர் ஏற்ற வகையில் உள்ளதால், சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டினர் கொடைக்கானலில் நிலவும் இந்த பனிப்பொழிவை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் அதிகப்படியான பனிப்பொழிவு, ஜீரோ டிகிரி தொட்டுள்ளதால்,தண்ணீர் ஆங்காங்கு உறைந்து கிடக்கிறது. பயிர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும் இதே நிலை அடுத்து வரும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பதினைந்து நாட்கள் நீடித்தால் பெரும்பாலான பயிர்கள் சேதம் அடையக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. கொடைக்கானலில் வசிப்பவர்கள் 5 மணிக்கு மேல் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பனிப்பொழிவை குளிரையும் பார்க்க ஆசைப்படுபவர்கள் கொடைக்கானலுக்கு சென்றாலே போதும் அந்த அனுபவத்தை பெறலாம் என கொடைக்கானலில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.