மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது. 

ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள், கால்நடை வளர்ப்பவர்களை வெளியேறுமாறு வனத்துறை அறிவுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், ஒக்கேனக்கல் அருகே உள்ள மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். வீடுகளில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதோடு, பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற வைத்தனர். இதில் சில பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. வனத்துறையினர் அராஜ போக்குடன் பூர்வ குடிமக்களை வெளியேற்றிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர். மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது. 

Scroll to load tweet…

வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.