ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள வேல்முருகன், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

பட்டப்பகலில் ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் முனியராஜ் என்பவர், அம்மாணவி ஷாலினியை காதலிக்குமாறு கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால், அதற்கு அம்மாணவி மறுத்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் முனியராஜ், மாணவி ஷாஙினியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இச்சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சமீப காலங்களாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளும், பணிக்கு செல்லும் பெண்களும் தொடர்ந்து பாலியல் வன்முறைகளாலும், காதல் தொல்லைகளாலும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

தற்போது, ராமேஸ்வரத்தில் அரங்கேறி இருக்கும் கொடூர நிகழ்வு, பெண்களுக்கு எதிரான அச்சத்தையும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பெரும் கேள்வியையும் எழுப்புகின்றன. இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி முனியராஜ் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் எந்தவித தாமதமும், தளர்வும் இருக்கக் கூடாது.

இனி வரும் காலங்களிலாவது, பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை கண்காணிப்பை மேம்படுத்தியும் கல்வி நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியும் செயல்பட வேண்டியது அவசியம். உயிரிழந்த மாணவி ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், ஷாலினியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.