- Home
- Tamil Nadu News
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கிய தமிழக அரசு! நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கிய தமிழக அரசு! நடந்தது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி திருவேங்கடம் மட்டும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், ஏ1 குற்றவாளியாக நாகேந்திரனும், ஏ2-வாக அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கடந்த மாதம் 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று கூறியது.
இதனைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தது. அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை காவல்துறை தயாரித்துள்ளது. சிபிஐ விசாரணை என்பது காவல்துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என இந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அஸ்வத்தாமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தன்னை இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

