Vaigaichelvan Vs TVK Vijay:காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒரு 'இன்குபேட்டர் குழந்தை.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அரசு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில் திமுக அரசுக்கு எதிரான திண்ணை பிரச்சாரக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சோமசுந்தரம் மற்றும் வைகைச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்குப் பல ஆலோசனைகளை வழங்கினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணிக்கு வரலாம். உதயநிதி ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். திமுக அரசாங்கம் தூக்கத்தில் இருக்கிறது' என்று விமர்சித்தார். தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் திமுகவிற்குப் பலத்த அடியை கொடுக்கப் போகிறார்கள். மேலும், திமுக கூட்டணி பலமானது என்றாலும், தற்போது பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய்யின் பிரசாரங்கள் திட்டமிடப்படாத பிரசாரமாகத் தெரிகின்றன. அவர் ஒரு ‘இன்குபேட்டர் குழந்தை’ போல முழுமையாக வளர்ச்சி அடையாத தலைவர் என்றும் குறிப்பிட்டார். அரைகுறையாகப் பேசுவதைத்தான் அவரது தேர்தல் பிரசாரமாக மக்கள் பார்க்கிறார்கள். அவர் இன்னும் பக்குவப்படவில்லை. பக்குவப்படாத ஒரு பிரசாரத்தைத்தான் மக்கள் பார்த்து வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் வருகை ஒருபோதும் வாக்குகளாக மாறாது என்றும் கூறினார்.
இதற்கு ஒரு உதாரணமாக, திண்டுக்கல்லில் நயன்தாராவைப் பார்ப்பதற்காக 60,000 பேர் திரண்டதையும், சேலத்தில் கடை திறப்பு விழாவுக்காக அறுபதாயிரம் பேர் கூடியதையும் சுட்டிக்காட்டினார். 2011 தேர்தலில் வடிவேலுக்குக் கூடிய கூட்டத்தையும் குறிப்பிட்டார். நடிகர்களைப் பார்ப்பதற்காக மக்கள் கூடுவார்கள். ஆனால் அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்றுதான் கவனிப்பார்கள். கொள்கை, லட்சியம், சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குபவர்களுக்குதான் மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலைக் கொச்சைப்படுத்துகிறது. திமுகவிடம் கமல் அடிமைச் சாசனம் எழுதிவிட்டார் என்பதை இது மறைமுகமாகச் சொல்கிறது என்றும் குறிப்பிட்டார். தங்களை நம்பி வந்த ஒருவருக்கு இந்த கதிதான் என்பதை மற்ற கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
