இந்திய தொழில் அதிபர், தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவை விசிக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக பேசியுள்ளதற்கு தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Zoho மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு இந்திய பணக்கார தொழில் அதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் வாட்ஸ் அப் புக்கு போட்டியாக 'அரட்டை' என்ற செயலியையும் ஸ்ரீதர் வேம்பு அறிமுகப்படுத்தினார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஸ்ரீதர் வேம்புவை தரக்குறைவாக பேசிய விசிக பிரமுகர்

இப்படி பெரு மதிப்பிற்குரிய ஸ்ரீதர் வேம்வை விசிக பிரமுகர் ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக ஒருமையில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதாவது விசிக கூட்டத்தில் பேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர், ''ஸ்ரீதர் வேம்பு பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவர் நம்முடைய எழுச்சித் தமிழர் (திருமாவளவன்) மீது நேரடி தாக்குதலை தொடங்கி இருக்கிறார்.

பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டாம்

விசிகவினர் வாழும் பகுதிகளில், தாழ்த்தப்படவர் வாழும் பகுதிகளில் கோயில் கட்டி தருகிறேன் என்று கூறி ஸ்ரீதர் வேம்பு நம்முடைய அக்கவுண்ட்டில் பணத்தை கொட்டிக் கொண்டு இருக்கிறார். சுமார் 24,000 கோடி ரூபாய் சொத்துகள் வைத்துள்ள ஸ்ரீதர் வேம்பு கோயில் கட்டுகிறேன் என பணத்தை இறைக்கிறார். அவர் கொடுக்கும் பணத்தை யாரும் வாங்க வேண்டாம். பணம் வாங்கி அவர்களுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். பாஜகவால் நாடே சீரழிந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

Scroll to load tweet…

தமிழிசை கண்டனம்

விசிக பிரமுகர் தனது பேச்சின்போது ஸ்ரீதர் வேம்புவை அவன், இவன் என ஒருமையிலும், நாய் என்ற சொல்லை குறிப்பிட்டும் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விசிக பிரமுகரின் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''விடுதலை சிறுத்தைகளின் இந்த பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றி அவர்கள் எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்பது தான் இந்த பேச்சின் சாரம்.

அமெரிக்காவுக்கு சவால் விடும் ஸ்ரீதர் வேம்பு

அதுவும் இந்த நாட்டை சுதேசி பாதையில் எடுத்துச் செல்வதற்காக அமெரிக்க தொழில்நுட்பத்திற்கே சவால் விட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு அவர்களை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவரை தரக்குறைவாக பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அடங்கமறு அத்துமீறு திருப்பி அடி

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இத்தகைய தரம் கெட்ட வார்த்தைகளை அனுமதிக்கிறாரா? அடங்கமறு அத்துமீறு திருப்பி அடி என்றுதான் இளைஞர்களை இவர்கள் பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருந்தி படி என்றால் இவர்களுக்கு கோபம் வருகிறது. ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

2026 பதில் சொல்லும்

இவர்களின் நோக்கம் இளைஞர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவது.. அவர்கள் முன்னேற ஆரம்பித்து விட்டால் இவர்களால் தாங்க முடியாது என்பதைத்தான் இவர்களது பேச்சும் செயலும் உணர்த்துகிறது. 2026 இதற்கெல்லாம் பதில் சொல்லும்'' என்று தெரிவித்துள்ளார்.