- Home
- Tamil Nadu News
- உயர்கல்வியில் இட ஒதுக்கீடு பறிபோகும்.. திமுகவுக்கு எதிராகத் திரும்பிய திருமாவளவன்!
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு பறிபோகும்.. திமுகவுக்கு எதிராகத் திரும்பிய திருமாவளவன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக அரசுக்கு திருமாவளன் கோரிக்கை
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சட்டத் திருத்தம் உயர்கல்வி வணிகமயமாவதை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்கள்
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் விரும்பினால், அவற்றைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள வழிவகுக்கிறது.
தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முன்பு 100 ஏக்கர் நிலம் தேவை என்றிருந்த விதியைத் தளர்த்தி, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர்; நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர்; இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் விரும்பினால், அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழகங்களாகச் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற முடியும்.
புதிதாக உருவாகும் தனியார் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்திலிருந்து மாணவர் கட்டணம், ஆசிரியர் ஊதியம் என அனைத்தையும் தமது விருப்பப்படி நிர்ணயித்துக் கொள்ள முடியும்.
இது உயர்கல்வி வணிகத்தை மிக வேகமாக அதிகரிக்கச் செய்து, தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக உயர்கல்வியின் நிலை
தமிழ்நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அதிகமாக இருந்தாலும், அது கல்வி தனியார்மயமாவதற்கும் வழிவகுத்துள்ளது.
மத்திய அரசின் 2020-2021-ம் ஆண்டுக்கான உயர் கல்வி சர்வே அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள கல்லூரிகளில் சுமார் 16% மட்டுமே அரசுக் கல்லூரிகள் ஆகும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
மாணவர் சேர்க்கையிலும் தனியார் கல்லூரிகளிலேயே அதிக மாணவர்கள் (சுமார் 13 லட்சம்) படிக்கின்றனர். அரசுக் கல்லூரிகளில் வெறும் 4.65 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 61 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தனியார் பல்கலைக்கழகங்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 26 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு.
இந்த புள்ளிவிவரங்கள், உயர்கல்வி ஏற்கனவே பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் பண்டமாகிவிட்டது என்பதையே காட்டுகிறது.
இட ஒதுக்கீடு பறிபோகும்
உயர்கல்வி தனியார்மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும், கல்விக் கட்டணம் அதிகரிக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தத் திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.