தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐந்து சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிசுத் தொகை வழங்கினார். கடந்த நான்காண்டுகளில் 32 அறிஞர்களின் 1442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளன. 

Books by 5 Tamil scholars to be nationalized: Chief Minister's announcement! : சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் நடைபெறும் "தமிழ் வார விழாவின்" நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிசுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.

தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடைமை

தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடந்த நான்காண்டுகளில் 32 அறிஞர்களின் 1442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 இலட்சம் 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.

நூலுரிமைத்தொகையாக 10 லட்சம்

இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10.00 இலட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 இலட்சம் வீதம் முதலமைச்சரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், செயலாளர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்