இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

தென்தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அந்தப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கிழக்கு மத்திய அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 4 சென்டி மீட்டர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.