2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மேலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் யாருக்கும் பங்கு கிடையாது என அக்கட்சி எம்பி தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து உரிமையும் வழங்கப்படுவதாக பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டது.

முன்னதாக தமிழகத்தில் தேசியஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான தம்பிதுரை இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், தமிழகத்தில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார். ஆட்சியிலும், அதிகாரத்திலும் யாருக்கும் பங்கு கிடையாது. அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.