சென்னை வானகரம் பகுதியில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட அரங்கிற்குள் அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அழைப்பிதழ் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மண்டபத்தின் வெளியே நின்று கொண்டு உள்ளே செல்ல முற்பட்டனர். ஆனால் தனியார் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.
இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் உள்ளே நுழைந்தபோது வாயில் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தொண்டர்கள் அழைப்பிதழ் இல்லாமல் சாரை சாரையாக மண்டபத்திற்குள் நுழைந்தனர். இதனால் அரங்கிற்குள் நூற்றுக்கணக்கானோர் கடும் நெருக்கடியோடு நின்று கொண்டிருந்தனர்.
மேலும் அழைப்பிதழோடு வந்த நபர்கள், அழைப்பிதழ் இல்லாமல் வந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முற்பட்ட நிலையில் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு தள்ளு முள்ளு நிலவியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட தனியார் பாதுகாவலர்கள் கீழே விழுந்து கிடந்தவர்களை தூக்கி விட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


