சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி உள்ளது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. தமிழத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாக பொதுக்குழு என்பது கட்சியின் அவைத்தலைவர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தமிழ் மகன் உசேனுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமிக்கு தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டு. அவர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூட்டணி தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் பழனிசாமிக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை பாஜக மீண்டும் கொண்டுவரும் முனைப்பில் செயல்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.