ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் அவரது வீட்டு முன்பே கொலை செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆனால் பெரம்பூர் மற்றும் வடசென்னை பட்டியலின மக்களிடம் மிகவும் பரிச்சயமான ஒரு தலைவரின் கொலை வழக்கை தமிழக காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல், ''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக காவல்துறை நியாயமாக விசாரிக்கவில்லை.

சிபிஐக்கு மாற்ற கோரிய சகோதரர்

கைது செய்யப்படவர்களிடம் அவசர கதியில் வாக்குமூலம் பெற்று மிக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மிக முக்கியமான நபர்களிடம் காவல்துறை விசாரிக்கவில்லை. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் காவல்துறை விசாரிக்க தவறி விட்டது. ஆகவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்''என்று கோரியிருந்தார்.

சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது. சிபிஐ இந்த வழக்கில் 6 மாதங்களுக்குள் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வழக்கு ஆவணங்களை தமிழக காவல்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

முட்டுக்கட்டை போடும் தமிழக அரசு

அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக திமுக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை பொறுத்தவரை அவருக்கு பெரம்பூர் மற்றும் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல செல்வாக்கு இருந்து வந்தது. வடசென்னை பட்டியலின மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே சென்று குரல் கொடுக்கும் முதல் ஆளாக ஆம்ஸ்ட்ராங் இருந்து வந்தார். பட்டியலின இளைஞர்கள் அவரை ஒரு ஹூரோ போல் பார்த்து வந்தனர்.

பட்டியலின மக்களின் ஆஸ்தான தலைவர் ஆம்ஸ்ட்ராங்

மேலும் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு பட்டியலின திரைக்கலைஞர்களையும் வளர்த்து விட்டவர் ஆம்ஸ்ட்ராங் தான். பகுஜன் சமாஜ் தமிழக தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஆம்ஸ்ட்ராங்குக்காக வடசென்னையில் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி அந்த கட்சிக்கு கிடைத்து வந்தது. 

ஆம்ஸ்ட்ராங் இறந்தபிறகு அவரது கொலைக்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கபட்ட வேண்டும் என்பது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி வடசென்னை பட்டியலின மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

ஆனால் தமிழக காவல்துறை இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்டது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதனால் தான் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது நீதிமன்றமே அனுமதி அளித்தும் அதற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

செல்வபெருந்தகையை காப்பாற்றுகிறதா திமுக அரசு?

விரைவில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தலித் மக்களின் வாக்குகளை மனதில் வைத்து சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

இந்த வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் சம்பந்தப்பட்டுள்ளார் என பகுஜன் சமாஜ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள அவரை காப்பாற்ற திமுக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளதா? என்ற கேள்வியை அரசியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

வடசென்னை வாக்குகள் பறிபோகிறதா?

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முடையீட்டின்படி உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்குமா? இல்லை தமிழக அரசின் கோரிக்கையை புறக்கணிக்குமா? திமுக அரசின் இந்த செயலால் வரும் தேர்தலில் வடசென்னையில் கணிசமான தலித் மக்களின் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காமல் போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.