’குழந்தை சுர்ஜித்தை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது. குழந்தையை மீட்க யார் முன்வந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். கடைசி கட்டத்தை அடையும் வரை மீட்பு பணிகள் தொடரும். தவறான நம்பிக்கையையும் ஊட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். முழுமையாக பள்ளம் தோண்ட இன்னும் 12 மணி நேரம் ஆகும்’என்கிறார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதட்டத்துக்கு ஆளாக்கியிருக்கும் பாலகன் சுர்ஜித்தின் மீட்புப்பணி குறித்து தொடர்ந்து தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், சம்பவ இடத்தில் தொடர்ச்சியாக மீட்புப் பணியை வழி நடத்திவரும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உண்மையான நிலவரம் குறித்துப் பேசுகையில்,...தொடர்ந்து சுஜித்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து துறை அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள். 24 மணி நேரமும் மீடியாக்களில் பார்ப்பவர்கள், இங்கு என்ன பிரச்சனை என்பது தெரியாமல் பேசுகிறார்கள். முதல் பிரச்சனை குழந்தை பாறை நிறைந்த குழிக்குள் மாட்டியுள்ளது. அதிலிருந்து மீட்க அதற்கான நிபுணர்களை வைத்து மீட்பு பணி நடந்தது. அது வெற்றி பெறாத நிலையில், முதலில் வெளிநாடு இயந்திரம் மூலம் டிரில்லிங் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன் இயந்திரம் வைத்து அப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பணியை தொடர்ந்தால் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தீப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது. 

குழந்தையை தொடர்ந்து மீட்கும் முயற்சிகள் நடக்கிறது. குழந்தையின் பெற்றோருக்கு உண்மையை மறைக்காமல் கூறி வருகிறோம். நிபுணர்கள் அனைவரிடமும் பேசியுள்ளோம். இதே இயந்திரத்தை தான் அவர்களும் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். வேறு ஏதாவது பகுதியில் தோண்டி எடுக்க முடியுமா என்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து பேசி வருகிறோம். திருப்தி தரும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அமைச்சர்கள், கட்சியினர் என எல்லோரும் கொடுக்கும் ஐடியாக்களை கொண்டு, நிபுணர்களை வைத்து மீட்பு பணிகள் நடக்கிறது. யாருடைய ஐடியாக்களையும் புறந்தள்ளிவிட வில்லை. 

கேமரா மூலம் 87 அடியில் தான் குழந்தை இருக்கிறது. அதிர்வுகள் காரணமாக குழந்தை மீது சில மண் துளிகள் இருக்கிறது. அவ்வளவு தான். ஏர் லாக் செய்து குழந்தையை வைத்திருக்கிறோம். அதன் நிலை குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குழந்தை அதே இடத்தில் தான் இருக்கிறது. எங்கள் உடன் இருப்பவர்களில் கடலில் துளை போடும் நிபுணத்துவம் கொண்டர்களும் இருக்கிறார்கள். முடிவுகளை தாமதிக்க கூடாது என்பதால், நானே முதல்வருடன் பேசி முடிவுகளை வேகமாக எடுக்கிறோம். தற்போது வரை 35 முதல் 40 அடி வரை தோண்டப்பட்டுள்ளது. நாங்கள் திட்டமிட்டுள்ளது  98 அடி. கீழே கரிசல் மண் தென்படும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் தொடர்ந்து தோண்ட உள்ளோம்.

 நிறைய பேர் எங்களிடம் பலூன் டெக்னாலஜி என்கிறார்கள். அதற்கு முதலில் இங்கு இடம் தேவை. ஹேங்கர் கொக்கி போட்டு எடுக்கலாம் என்கிறார்கள். அதற்கான சாத்தியங்கள் இங்கு இல்லை. போதுமான இடம் ஆழ்துளையில் இல்லை. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது. குழந்தையை மீட்க யார் முன்வந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். கடைசி கட்டத்தை அடையும் வரை மீட்பு பணிகள் தொடரும். தவறான நம்பிக்கையையும் ஊட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். முழுமையாக பள்ளம் தோண்ட இன்னும் 12 மணி நேரம் ஆகும். பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன் என்கிறார் ராதாகிருஷ்ணன்.