ONGC Company: நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த சட்டவிரோத கிணறுகளுக்குத் தடை விதித்து, ஓஎன்ஜிசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்த ஒன்றிய அரசு, அதற்கு மாறாக எப்படி ஓஎன்ஜிசி ஆய்வு கிணறு அமைக்க அனுமதி கொடுத்திருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வதற்கும், அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை கைவிடக்கோரியும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தீரம்மிக்க போராட்டங்களால், டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மீத்தேன், ஷேல்கேஸ், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த இயற்கை எரிவாயு திட்டத்தையும் ஒன்றிய அரசால் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஓஎன்ஜிசி-யின் கிணறுகள் மட்டுமே செயல்பட முடியும். இந்நிலையில், 2024- 25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய எரிசக்தி இயக்குநரகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், பெரிய குடி, திருவாரூர்-, அன்னவாசல் நல்லூர் ஆகிய மூன்று இடங்களில் ஷேல் ஆய்வு கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி செயல்படுத்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்த ஒன்றிய அரசு, அதற்கு மாறாக எப்படி ஓஎன்ஜிசி ஆய்வு கிணறு அமைக்க அனுமதி கொடுத்திருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த ஷேல் ஆய்வு கிணற்றுக்கு, தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.