வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ம் தேதி கேரளாவில் துவங்கும். நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருவதால், தென்மேற்கு பருவ மழையை ஆவலோடு மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நடப்பாண்டில்  தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 5 நாட்கள் கால தாமதமாகி 6-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து ஒரு நாள் தாமதமாக 7-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.  தற்போது மேலும் ஒருநாள் தாமதமாக ஜூன் 8-ம் தேதி கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அத்துடன் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதனிடையே தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 14  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.