இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் பெய்யும் தென் மேற்கு பருவமழைதான் இந்தியாவின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. கேரளத்தில் ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கிவிடுவது வழக்கம். ஆனால் ஆரம்பத்தில் இந்த மழையானது ஜூன் 6ம் தேதி தான் துவங்கும் என்று நான்கு நாட்கள் தாமதமானது. பின்னர் 6ம் தேதியும் மழை துவங்கவில்லை. மாறாக ஜூன் 8ம் தேதி தான் பருவமழை தொடங்கியது..

பின்னர் மே 10ம் தேதிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மழை பெய்யத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வாயு புயல் தோன்றி சிறிது மழையும் பெய்தது. ஆனால், அதன் பின்னர் ஒரு வார காலமாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.

இந்நிலையில் பருவமழை இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை ஆரம்பத்தில் தான் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த பருவ காலத்தில் இந்தியா முழுவதும் சுமார் 89 செ.மீ வரை மழை பதிவாகும். பல்வேறு இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதும் உண்டு. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில் தான் பருவமழை தீவிரம் அடைய தாமதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் இதே நேரத்தில் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் பருவமழை தொடங்கி இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் தற்போது வரை 10 முதல் 15 விழுக்காடு பகுதிகளில் மட்டுமே பருவமழை தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வாயு புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றது. பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் தென்மேற்கு பருவமழைக்கு காரணமான மேற்குத் தொடர்ச்சி மலை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதும் இதற்கு முக்கிய காரணம் என்று சமக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் தென் மேற்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைய 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானியலாளர்கள் கணித்துள்ளனர்.