WhatsApp : அதை செய்ய சொன்னால் இந்தியாவில் வாட்ஸ் அப் சேவைகள் கிடைக்காது.. நிறுவனம் எச்சரிக்கை..
என்கிரிப்ஷனை உடைக்கச் சொன்னால், வாட்ஸ் அப் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும் என்று அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். விரைவான தகவல் பரிமாற்றத்திற்காக பலரும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் 512 என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, மெசேஜிங் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சமூக ஊடக நிறுவனங்கள், நீதிமன்றம் அல்லது தகுதிவாய்ந்த அதிகாரத்தால் கேட்கப்படும் போது, , யார் செய்தியை அனுப்பினார்கள் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மேலும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் இந்த சட்டத்தை மீறுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதனை எதிர்த்து இந்நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வாட்ஸ் அப் நிறுவனம் தனது மனுவில், “ தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை உடைப்பது, வாட்ஸ்அப்பின் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களின் தனியுரிமை மற்றும் பேச்சுரிமைக்கான அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருக்கும்” என்று தெரிவித்திருந்தது.
இந்த மனு நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் கரியா “ உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டம் இல்லை. இந்த சட்டம் பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
மக்கள் செய்தி அனுப்பும் தளத்தை அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் தனியுரிமைக்கு உத்தரவாதம் அளிப்பதால்தான் பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். என்கிரிப்ஷனை உடைக்கச் சொன்னால், வாட்ஸ் அப் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார்.
Mobile Theft : செல்போன் தொலைஞ்சு போனா உடனே நீங்க செய்ய வேண்டிய 3 விஷயங்கள் இதுதான்..
மற்றொரு முக்கிய கருத்து என்னவென்றால், வாட்ஸ்அப் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான செய்திகளை சேமிக்க வேண்டும். எந்த செய்திகளை டிக்ரிப்ட் செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது. அதாவது மில்லியன் கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான செய்திகள் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
எனினும் அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்குகளில் இதுபோன்ற தளங்களில் செய்திகளை தோற்றுவித்தவர்களைக் கண்டறிய இந்த விதி தேவை என்று கூறினார். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களைப் பணமாக்குகின்றன என்றும், அது தனியுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறுவதற்கு சட்டப்பூர்வமாக உரிமை இல்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை வழக்கை ஒத்திவைத்தனர்.
என்கிரிப்ஷனை உடைக்காமல் செய்திகளின் தோற்றத்தை கண்டுபிடிக்க வழி இல்லை என்றால், வாட்ஸ்அப் வேறு சில வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.