எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய் முதலமைச்சராக கோட்டையில் அமர உழைக்கும் என்று தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் அனுபவம்வாய்ந்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்தது முதல் தவெகவுக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார் செங்கோட்டையன். விஜய்ய்யை முதலமைச்சராக்காமல் ஓய மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். ஈரோட்டில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள மக்கள் சந்திப்புக்கான நிகழ்ச்சியை செங்கோட்டையன் பிரம்மாண்டமாக செய்துள்ளார்.

விஜய்யை பார்த்து வியந்து போனேன்

இந்த நிலையில், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''செங்கோட்டையன் ஏன் விஜய் பின்னால் சென்றார் என்று கேட்கிறார்கள். தவெகவில் என்னை ஒரு சகோதரனாக விஜய் அரவணைத்தது பார்த்து நான் வியந்து போனேன். என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்யை கோட்டையில் அமர வைப்பதற்கு சிந்தாமல், சிதராமல் நான் பணியை மேற்கொள்வேன்.

எதிர்கால தமிழகம் எப்படி இருக்கும்?

விஜய்கு மக்கள் சக்தி, ஆதரவு உள்ளது. ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டு விட்டு அவர் அரசியலுக்கு வந்துள்ளார். எனக்கு பணம் தேவை இல்லை. மக்கள் தான் தேவை என முடிவு செய்துள்ளார். 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் நான் கூர்மையாக பணிகளை ஆற்றியிருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். எதிர்கால தமிழகம் எல்லோரையும் வாழ வைக்கும் தமிழகமாக அமையும். எதிர்கால தமிழகம் தொழிலாளர்களை உயர்த்திப் பிடிக்கும். எதிர்கால தமிழகம் மாணவர்களின் கல்வியை மேலும் உயர்த்தும்.

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

எதிர்கால தமிழகம் விவசாயிகளை வாழ வைக்கும். பெண்களுக்கு முழு உரிமை, சுதந்திரம் வழங்கும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதுதான் நமது பணியாக இருக்க வேண்டும். விஜய்யை நாம் முதலமைச்சராக வைத்து அழகு பார்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.