- Home
- Politics
- பெருந்துறையில் இடம் மாறும் விஜய் பிரச்சாரம்..! அடேங்கப்பா உள்குத்து அரசியல்..! புகுந்து விளையாடும் திமுக- அதிமுக புள்ளிகள்..!
பெருந்துறையில் இடம் மாறும் விஜய் பிரச்சாரம்..! அடேங்கப்பா உள்குத்து அரசியல்..! புகுந்து விளையாடும் திமுக- அதிமுக புள்ளிகள்..!
அறநிலையத்துறை இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்யக்கூடாது என தி.மு.க.வின் முக்கியப்புள்ளி ஒருவர் மூலமாக கே.சி.கருப்பண்ணனும், ஜெயக்குமாரும் காய்நகர்த்தி வருகின்றனர்.

அறிவாலயத்தில் அதிர்வலை
கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் விஜய் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதன் பின்னணியில் அதிமுக நிர்வாகிகள், தி.மு.க. அமைச்சர் ஒருவரும் இருப்பதாக வெளியிருக்கும் தகவல்கள்தான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 18 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்று தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் முதல் பெரிய பொதுக்கூட்டமாக இது.
இடம் மாறிய தவெக பிரச்சாரக்கூட்டம்
காவல்துறை விதிகளின்படி 84 நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெறப்பட்டுள்ளது. செங்கோட்டையன், “இந்த கூட்டத்தை சீரோடும், சிறப்போடும் ஏற்பாடு செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, புதுச்சேரிக்குப் பிறகு முதன்முதலில் ஈரோட்டைத் தேர்வு செய்துள்ளோம்” என்று கூறினார். கூட்டத்தில் புதிதாக யார் யாரெல்லாம் தவெகவில் இணைவார்கள் என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்; நிறைய பேர் இணைய வாய்ப்பு உள்ளது” என்று பதிலளித்தார். தவெகவில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், கூட்டம் புதிய வரலாறு படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கோபிச் செட்டிப்பாளையத்தில்தான் விஜய் பிரச்சாரம் செய்ய முடியு செய்தார். ஆனால், பெருந்துறைதான் அவருக்கு கிடைத்தது. இதன் பின்னணியில் அமைச்சர் சு.முத்துசாமி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள உ.பி.க்களிடம் பேசினோம்.
‘‘விஜய் பிரச்சாரம் செய்தவதற்கு புதுச்சேரியில்கூட அனுமதி கிடைப்பது கடினமாக இருந்தது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைத்தது. தவிர, கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்குக்கூட கரூர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் கூட விஜய்க்கு கிடைக்க வில்லை.
திமுக நிர்வாகிகளுக்கிடையே உள்குத்து
ஆனால், பெருந்துறையில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு இடம் கிடைத்ததன் பின்னணியில் அமைச்சர் சு.முத்துசாமி இருக்கிறார். விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் தனியார் இடம்கூட இல்லை. அது அரசுக்கு சொந்தமான அறநிலையத்துறை இடம். இந்த இடம் கிடைத்ததன் பின்னணியில் அமைச்சரின் ‘சித்து விளையாட்டுக்கள்’ இருப்பதாக உடன்பிறப்புக்களே கிசுகிசுக்கின்றனர்.
பெருந்துறை, சரளையில் பிரசாரத்துக்கு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ள, 19 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 31 ஏக்கர் பரப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இதனால் கோவில் இடத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது என்று, மாவட்ட நிர்வாகத்துக்கு இந்து சயம அறநிலையத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணைய ஆணையாளர் பரஞ்ஜோதி, ‘‘பிரசாரம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறையிடம் த.வெ.க., அனுமதி பெறாத நிலையில், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு எங்கள் துறை தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார். அமைச்சர் சொல்லாமல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காது, இந்தப் பின்னணியில் அமைச்சர் சு.முத்துசாமி இருக்கிறார்’’ என்கிறனர்.
விஜய்யின் பிரச்சாரப் பின்னணியில் அமைச்சர் சு.முத்துசாமி இருப்பதன் காரணம் குறித்து சிலரிடம் பேசினோம். ‘‘பெருந்துறை தொகுதியில்தான் சு.முத்துசாமிக்கு போட்டியாளர் ஒருவர் இருக்கிறார். இவருக்கு சமீபத்தில்தான் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவரை எப்படியாவது ‘டம்மி’யாக்க வேண்டும் என்பதால்தான் அவரது தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன் பின்னணியில் முத்துசாமி இருக்கிறார். ஏற்கனவே, மழைக்காலத்திலும் பெருந்துறை தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, திருப்பூரில் இருந்து வரும் கழிவுகள் பெருந்துறையில் கொட்டப்படுவது போன்றவற்றிற்குப் பின்னாலும், அமைச்சர்தான் இருக்கிறார்’’ என்றனர்.
செங்கோட்டையனுக்கு எதிராக சபதம்
தவிர, விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பின்னால் அ.தி.மு.க.வுன் திரைமறைவு அரசியலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் இருக்கிறார். இவர் எடப்பாடிக்கு சம்பந்தி உறவுக்காரர். அதே சமயம், பெருந்துறை அதிமுக, எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெயக்குமார். இவர் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்ததே செங்கோட்டையன்தான்.
ஆனால், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது கே.சி.கருப்பண்ணனுக்கும், அதிமுக எம்.எல்.ஏ., ஜெயக்குமாருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே, செங்கோட்டையன் பவானி மற்றும் பெருந்துறை தொகுதியில் இவர்கள் இருவரும் ஜெயக்கக்கூடாது என்பதில் சபதம் எடுத்திருக்கிறார். அதே போல் செங்கோட்டையன் கோபியில் ஜெயிக்கக்கூடாது என இவர்கள் இருவரும் சபதம் எடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அறநிலையத்துறை இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்யக்கூடாது என தி.மு.க.வின் முக்கியப்புள்ளி ஒருவர் மூலமாக கே.சி.கருப்பண்ணனும், ஜெயக்குமாரும் காய்நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரனின் உறவினர் கே.கே.பாலுவுக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்படலாம் என்கிறார்கள்.
