தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரைக் காலை  மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது, 

தமிழகத்தில் 22ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் மத்திய அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மிக மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், ஆகிய இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது,

தமிழகத்தைப் பொறுத்தவரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் மிக அதிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதும் அல்ல. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதையடுத்து அந்த 4 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்கனவே மழை காரணமாக 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கேத்தி உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நீலகிரியிலும் மிக அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ராமநாதபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிற்து.