முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணையும் நிலையில் திமுகவுக்கு ரெட் அலர்ட் ஆரம்பமாகிவிட்டதாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார். அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு இணையாக செயல்பட்ட செங்கோட்டையனுக்கு தவெகவில் மிக முக்கிய பொறுப்பு வழங்குவது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
விஜய் நடத்திய ஆலோசனை முடிவில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் இன்று காலை தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாகிகள் குழு உறுப்பினர் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பொதுச்செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தவெக கொள்கைபரப்பு செயலாளர் திமுகவுக்கு ரெட் அலர்ட் ஆரம்பமாகிவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் நடக்கப்போகின்ற மாற்றங்களை பார்க்கப்போகிறீர்கள். 2026ல் தவெக தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.


