தமிழகத்தில்  அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வகையில் வெயில் வாட்டி எடுத்து வந்தது. கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால், வெயில் தாக்கம் மேலும் அதிகரித்தது.

 அனல் காற்றுடன் வெயில் அடித்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.சாலையோர வியாபாரிகள், குடைபிடித்தபடியும், சாக்குபையை மேற்கூரைபோல போட்டுக்கொண்டும் வியாபாரம் செய்து வருகிறார்கள்.  

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று வெயில் வெளுத்து வாங்கியது. மாலை வானத்தில் கருமேகம் திரண்டு, இடி-மின்னல் அடித்தது. சிறிது நேரத்தில் லேசான காற்றுடன் திருச்சி, பொன்மலை, பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், கல்கண்டார் கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. 

இதேபோல் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை,திருச்சி,நீலகிரி,திண்டுக்கல்,தேனி போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை இருப்பதாக சொல்லி இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை  பெய்தது.

வானிலை ஆய்வு மையம் சொன்னது போலவே மழை சில மாவட்டங்களில் பெய்திருக்கிறது. இப்படி மழை பெய்தாலும் மறுபுறம் வெயிலானது வழக்கம் போலவே பல இடங்களில் சதத்தை பதிவு செய்திருக்கிறது.  

திருச்சியில் 107.2, மதுரை 106.8, திருத்தணி 106.7,வேலூர் 106.3, பரமத்தி வேலூர் 105.8, நெல்லை 104.5, சேலம் 101.1, சென்னை 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெயில் பதிவாகி உள்ளது.