பொங்கல் பண்டிகைக்காக 14,263 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கி வியாபாரம், அலுவலகங்களில் பணி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முதல்தேர்வாக ரயில்களையே பயன்படுத்துகின்றனர். ரயிலுக்கான முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்னரே செய்ய தொடங்கினர். இதனால் பொங்கலுக்கான முன்பதிவு தொடங்கிய அனைத்து ரயில்களிலும் 10 நிமிடங்களில் முன்பதிவு முடிந்தது. ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அடுத்து அரசு பஸ்களை தான் நாடுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பொங்கல் செல்பவர்களின் வசதிக்காக 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13, 14 ஆகிய 4 நாட்களுக்குச் சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும். கடந்த ஆண்டு 11,651 பஸ்கள் 3 நாட்களுக்கு இயக்கப்பட்டன. மொத்தம் தமிழகம் முழுவதும் 20,125 பஸ்கள் சென்ற ஆண்டு இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 4 நாட்களுக்கு 14,263 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 24,708 பஸ்கள் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு 3 நாட்களில் 2 லட்சத்து ,4 ஆயிரத்து 275 பேர் முன்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 92 ஆயிரத்து 220 பேர் பயணம் செய்தனர். இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்த்து அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்படும். அரசு குறைந்த கட்டணத்தில் எவ்வளவு பஸ்கள் வேண்டுமானாலும் இயக்க தயாராக உள்ளோம்.

தனியார் பஸ்களில் விரும்பிச் செல்பவர்களை நாங்கள் தடுக்க முடியாது. இருந்த போதிலும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரும் போது அந்தக் கட்டணத்தை திரும்ப வாங்கித் தந்துள்ளோம். பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் தொடர்பாக சிறப்பு முன்பதிவு மையங்கள் உள்ளன. விசாரணை மையங்கள் உள்ளன.

மேலும் ஒரு சில பயணிகள் தெரியாமல் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து விடுகிறார்கள். இவர்களை மாநகர் பஸ் மூலம் சம்பந்தப்பட்ட சிறப்பு பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கிறோம்.

அனைத்து இடங்களிலும் போக்குவரத்து காவல்துறையினரின் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்வார்கள். போக்குவரத்து ஆய்வாளர்கள் அனைத்துச் சுங்க சாவடியிலிருந்து சிறப்பு பஸ்கள் தனியாக செல்ல ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

கார்களில் செல்பவர்கள் ஈ.சி.ஆர் வழியாக தாம்பரம் பகுதியில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சி மற்றும் எப்.எம்மில் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புகார் எண்கள் அறிவிப்பு

பயணிகள் 18004256151 என்ற தொலைப் பேசி எண்ணில் தொடர்பு புகார்தெரிவித்தால் அது பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்காலிக பஸ் நிலையங்கள்

மேலும் அமைச்சர் கூறுகையில், ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், ஒசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும், அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் போன்ற பஸ்கள் இயக்கப்படும்.

பொதுமக்கள் வசதிக்காக தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்படும். சேலம், கோவைக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் என்றார்.