Job Alert : லட்சக்கணக்கில் வெளிநாட்டில் சம்பளம்.. இளைஞர்களை ஏமாற்ற மோசடி வலை- அலர்ட் செய்யும் தமிழக அரசு
"அதிக சம்பளம்" என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக புகார் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வேலை
படித்த படிப்பிற்கு உரிய வேலை கிடைக்காத காரணத்தால் இன்றைய இளைஞர்கள் தவறான வழிகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் லட்சக்கணக்கில் சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இணையதளத்தில் பணம் பறிக்கும் குற்ற சம்பவங்களில் இளைஞர்களை ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வருகிறது.
இந்தநிலையில் இளைஞர்களை அலர்ட் செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மார் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் "டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்"
ஆன்லைன் மோசடி வேலை
"தரவு உள்ளீட்டாளர்" வேலை, "அதிக சம்பளம்" என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், அரசினால் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும்,
என்ன வேலை.? உண்மை தன்மை.?
அவ்வாறான பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலத்துறை" அல்லது "குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை" அல்லது சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசினால் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்கள் www.emigrate.gov.in இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். மேலும், சென்னை குடிபெயர்வு அலுவலக உதவி எண். 90421 49222 a, poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம் எனவும் நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.