TN 12th Exam Result : நாளை 12ஆம் வகுப்பு ரிசல்ட்.! எத்தனை மணிக்கு பார்க்கலாம்.? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு
12 ஆம் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆர்வமோடு காத்துள்ளனர். தங்களது பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது.
இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும் . இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது.
விடை திருத்தும் பணி நிறைவு
இந்த தேர்வினை 3,302 மையங்களில் சுமார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்வு முடிவு வெளியிடப்படுவது காலதாமதம் ஆகும் என எதிரிபார்க்கப்பட்டது. குறிப்பாக தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டதால் பேப்பர் திருத்தும் பணி பாதிக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியே தேர்தல் முடிவடைந்துள்ளது.
நாளை காலை தேர்வு முடிவு
இதனால் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 86 மையங்களில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதளத்தில் மாணவர்களின் கால் டிக்கெட் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை பார்த்துக்கொள்ளலாம்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு
மேலும் மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவு நாளை வெளியான நிலையில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.