டெல்லியில் பெற்ற பிள்ளைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்

வடமேற்கு டெல்லியின் கேசவ் புரம் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் 13 வயது சிறுமியும் அவரது தம்பியும் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அவர்களது தந்தை மணீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரவு சுமார் 7.15 மணியளவில் குழந்தைகளின் தாயாரிடம் இருந்து அழைப்பு வந்தது. பள்ளிக்கு சென்ற அவரது குழந்தைகள் இருவரும் வீடு திரும்பவில்லை எனவும், வழக்கமாக அவர்களை பள்ளியில் இருந்து அழைத்து வரும் தனது கணவர் குழந்தைகளை அழைத்து வந்திருப்பார் என தாம் கருதியதாகவும் தெரிவித்தார்.

ஆனால், கணவர் மனீஷின் செல்போனை தொடர்பு கொண்டபோது அழைப்பு போகவில்லை எனவும், இதனால் சந்தேகமடைந்து மாலையில் தங்களது மளிகை கடையை திறந்து பார்த்தபோது, குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததாக குழந்தைகளின் தாயார் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக, குழந்தைகளை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அவர்களது தாயார் அனுமதித்துள்ளார். ஆனால், குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணீஷ் தனது குழந்தைகளுக்கு ஏதேனும் விஷப் பொருளைக் கொடுத்தோ அல்லது அவர்களை மூச்சுத்திணறடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் குருத்வாராவில் சீக்கிய புனித நூலைக் கிழித்தாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் படுகொலை!

இந்த வழக்கில் இந்த விவகாரம் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வந்தபிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மனிஷை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சில நிதிப் பிரச்னையால் மனிஷ் மனமுடைந்து இருந்தது தெரியவந்துள்ளதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.