பெயரளவில் கருத்து கேட்பு கூட்டம்..! அவசர கதியில் விமான நிலைய பணி- திமுக அரசுக்கு எதிராக சீறிய ஓபிஎஸ்
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும்போது அப்பகுதி மக்களுடைய ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்குமாறும், ஒப்புதலைப் பெற முடியாவிட்டால் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பரந்தூர் புதிய விமான நிலையம்
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தினை புறந்தள்ளிவிட்டு, தன்னிச்சையாக அரசு செயல்படும்பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் குதிக்கும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து இருக்கிறது. இதன்படி, வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்புகளும் தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விமான நிலையத் திட்டத்தின் காரணமாக, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இது தவிர, அங்கு பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுவதோடு, இந்தப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமையும் உருவாகும். இந்தச் சூழ்நிலையில், நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்படி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டியும், கருப்பு கொடிகளை கையில் ஏந்தியும் போராட்டங்களை நடத்தியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையையும், அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆராய்ந்து பார்த்தால், பெயரளவிற்கு கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு துவங்க உள்ளது தெள்ளத் தெளிவாகிறது. இந்த நடைமுறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும். தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற அடிப்படையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவது முக்கியமானது என்றாலும், அதைவிட முக்கியமானது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்கு உணர்ந்து இருக்கிறது.
பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழையெளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும். இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. ஆனால், இதைச் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல் துறை முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற நடவடிக்கை அங்குள்ள ஏழையெளிய மக்களை அச்சுறுத்துவதாக அமையும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து பெற்று, அவர்களுடைய பேசி, அவர்களுடைய முழு ஒப்புதலைப் பெற்று விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக களத்தில் இறங்கும்- எச்சரிக்கை
பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தெரிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தினை புறந்தள்ளிவிட்டு, தன்னிச்சையாக அரசு செயல்படும்பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்