திருத்தணியில் நடைபெற்ற “மரங்களோடு பேசுவோம்” மாநாட்டில் சீமான், மரங்கள் வெட்டப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எச்சரித்தார். மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, பசுமை சார்ந்த அரசியல் திட்டங்களையும் முன்வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில், செம்மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் இன்று நடைபெற்ற “மரங்களோடு பேசுவோம்” மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உரையாற்றினார்.
மரங்களின் அவசியம் – சீமான் எச்சரிக்கை
மாநாட்டில் பேசிய அவர், “மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலையியல் மாறி வருகிறது பருவமழை கிடையாது; புயல் மழைகளே அதிகரித்துவிட்டன. உலக வெப்பமயமாதலால் கடலோரப் பகுதிகள் ஆபத்தில் உள்ளன. கடல் பொங்கி எழும்பினால், சுனாமி போன்றவை பேரழிவுகள் மீண்டும் ஏற்படும். இதனை தடுக்க ஒரே வழி மரங்களை காப்பது, புதிதாக நட்டுவிடுவது” என்றார்.
பசுமை வழியில் அரசியல் திட்டங்கள்
“நான் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு மரம் நடந்தால் கட்டாயமாகும்.பள்ளி மாணவர் பத்து மரங்கள் நட்டால் தேர்வில் 10 மதிப்பெண்கள் தரப்படும். 100 மரங்களை நட்டால் ‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ என அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
1,000 மரங்கள் நட்டால் அந்த நபரின் இறுதி சடங்கில் அரச மரியாதை வழங்கப்படும். வீடுகளில் மரங்களை வெட்ட வேண்டுமெனில் எனது அனுமதி அவசியம். கிளையைக் கூட வெட்டினால், அது சக மனிதனின் கையை வெட்டுவதற்கு சமம். அதற்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிப்பேன்” எனக் கூறினார்.
ஓட்டுக்காக அல்ல – நாட்டுக்காக
சுற்றுச்சூழல் குறித்த உரையின்போது, சீமான் அரசியல் விமர்சனங்களையும் அடுக்கடுக்காக வைத்தார். “நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்த முடியும். வெறும் ஓட்டுக்காக நிற்பவர்களால் முடியாது. அணில்களை காண முடியாது போல, மரங்கள் குறைந்தால் உயிரினங்களின் வாழ்வும் அழியும். எனவே இந்த போராட்டம் மரங்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்துக்காக” என்றார்.
திரைப்போதை குறித்த குற்றச்சாட்டு
மேலும் அவர், “ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் உள்ளனர். ஆனால் அதற்கு இணையான மற்றொரு போதை திரைப்போதை. அதற்கு யாரும் எதிராகப் பேசுவதில்லை. ஐயா நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில் தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான்.
நீ பின்னாடி போய் நிற்கிறாய். நீ கலையை போற்றுகொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும் என்றும், நடித்தால் நோட்டைக் கொடுக்கிறார்கள். நடிக்காமல் விட்டால் நாட்டையே கொடுக்கிறார்கள் என்கிற நிலை உருவாகிவிட்டது” என்றும் நடிகர் விஜயை குறிவைத்து விமர்சித்தார்.
வெளிநாட்டு பாராட்டு – உள்ளூர் அவமதிப்பு
சீமான் உரையில் ஒரு வேதனைக்கும் குரல் கொடுத்தார்: “நான் மரத்தை கட்டிப்பிடித்து பேசினபோது சிரித்தார்கள். ஆனால் வெளிநாட்டு மக்களே அதைப் பாராட்டினார்கள். நம் நாட்டில் ஒருவர் தமிழில் பேசினால் கேலி, ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் புத்திசாலி என்று புகழ்கிறார்கள். இது ஒரு நோயாக மாறிவிட்டது” என்றார்.
