அண்மையில் உயிரிழந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகனும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு குடும்ப உறுப்பினர்கள் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மு.க.முத்துவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தேன். அரசியலில் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் இவர்களுடன் உறவு இன்றும் நீடிக்கிறது.

மு.க.அழகிரியை நான் தற்போதும் அண்ணா என்று தான் அழைப்பேன். அதே போன்று தயாளு அம்மாவை நான் அம்மா என்று தான் அழைப்பேன். அதே போன்று நான் ஒருமுறை சரியாக உணவு சாப்பிடாமல் பொதுவெளியில் மயங்கி விழுந்தபோது என்னை தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலனில் அக்கறை செலுத்துமாறு தெரிவித்தார். அதே போன்று எனது தந்தையின் மறைவின் போது தன்னை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினார் என்றார்.