Krishnagiri DMK | கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் பதவி பறிபோனது.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்து பரிதா நவாப் பொறுப்பு வகித்து வந்தார். துணைத்தலைவராக திமுக.வின் சாவித்ரி கடலரசுமூர்த்தி உள்ளார். நகராட்சியைப் பொறுத்த வரை திமுகவுக்கு 25 கவுன்சிலர்களும், அதிமுகவுக்கு 6 கவுன்சிலர்களும் உள்ளனர். மேலும் பாஜக., காங்கிரஸ் தரப்பில் தலா ஒருவர் என மொத்தமாக 33 பேர் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி திமுக கவுன்சிலர்கள் 23 பேர் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் முன்னிலையில் இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக அதிருப்தியில் இருந்த திமுக கவுன்சிலர்களை அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ய முயன்று தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பரபரப்பான சூழல்களுக்கு இடையே நகராட்சி ஆணையர் சதீஷ் குமார் முன்னிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 27 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் நகராட்சி பெண் தலைவரின் பதவி பறிபோனது.
