தமிழகத்தில் எத்தனை அணிகள் வந்தாலும் திமுக தான் 7வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பாஜக எது சொன்னாலும் தலையாட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''எத்தனை அணிகள் களத்தில் இருந்தாலும் 2026ல் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.

இபிஎஸ்க்கு வேறு வேலை இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்பதால் திமுக ஆட்சியின் திட்டங்களை குறைகூறுகிறார். எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை எங்கள் பலமாகவோ, பலவீனமாகவோ பார்க்கவில்லை. எங்கள் வேலையை பார்க்கிறோம்'' என்று தெரிவித்தார்.

திமுகவை மிரட்ட முடியாது

முன்னதாக புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''எதிரிகளாக இருப்பவர்கள் நம்மை தாக்குவதற்கு, அழிப்பதற்கு புதுப்புது முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என பல்வேறு ஆயுதங்கள் மூலம் நம்மை மிரட்டிப் பார்த்தார்கள். இப்போது SIR என்ற ஆயுதத்தின் மூலம்தான் திமுகவை அழிக்க, ஒழிக்க முடியுமென அதனை கையிலெடுத்திருக்கிறார்கள். இது வேறு மாநிலங்களில் எடுபடலாமே தவிர, தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. முடியாது.

பாஜகவின் அடிமை அதிமுக‌

S.I.R-க்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. S.I.R-க்கு எதிராக அதிமுக நிற்கிறது என்று சொன்னால் முன்கூட்டியே வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால் திடீரென்று போடுவதற்கு என்ன காரணம்? S.I.R-ஐ அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவோ, தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில் அடிமையாக அதிமுக இருக்கிறது.

அதிமுக கபட நாடகம்

S.I.R ஐ எதிர்ப்பதற்கு அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை. ஆனால் நாம் தொடுத்த வழக்கில் அவர்கள் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் S.I.R வழக்கில் கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. பிஎல்ஓ என்பது அங்கு இருக்ககூடிய அரசு ஊழியர்களை வைத்துக் கொண்டு அந்த பணிகளை செய்வதாகும்.

ஆமாம் சாமி போடும் பழனிசாமி

பிஎல்ஓ 2 என்பது நமது கட்சியை சார்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு துணை நிற்பவர்கள். இந்த பிஎல்ஓ 2‍க்களை நாம் நன்றாக கட்டமைத்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். இந்த பிஎல்ஓ 2‍ நியமனம் தவறு என்று சொல்லி அதிமுக நாம் தொடர்ந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள கேட்டுள்ளது. இதுதான் உண்மை. ஆனால் அது எடுபடாது. டெல்லியில் உள்ள பிக்பாஸுக்கு ஆமாம் சாமி போட்டுத்தான் ஆகணும். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார்.