அரபிக் கடலில் புயல் சின்னம்!! அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது மழை!!
அரபிக் கடலில், வரும் 6ம் தேதி, புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ள நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட வட கிழக்கு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கப் போகுது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, நேற்று முன் தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து உடனடியாக வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வட கிழக்கு பருவமழை இன்றும் தொடங்காத நிலையில், அரபிக் கடலை ஒட்டிய பகுதிகள், தென் மாநிலங்கள் மற்றும் தென் கிழக்கு கடலோர பகுதிகளில், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தமிழகத்தில், தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், சில நாட்களாக மழை பெய்து வருகிறது.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், குன்னுாரில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.பரமக்குடி, இரணியல், விளாத்திகுளம், 6; சாத்துார், மதுரை திருமங்கலம், வத்திராயிருப்பு, 5; கோத்திகிரி, முதுகுளத்துார், ஆண்டிபட்டி, கேத்தி, 4; குளச்சல், உசிலம்பட்டி, சூலகிரி மற்றும் கமுதி, 3 செ.மீ. மழை பெய்துஉள்ளது.
இந்நிலையில், அரபிக் கடலில் வரும், 6ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவுக்கு தென் மேற்கே, அரபிக் கடலில், இந்த காற்றழுத்த பகுதி உருவாகி, படிப்படியாக, புயல் சின்னமாக வலுவடையும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், கேரளா மற்றும் குமரி கடற்பகுதியை ஒட்டி, கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட வட மபவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போகுது என அறிவிக்கப்பட்டுள்ளது