தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வலுத்துள்ளது. சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையிலும் 181வது வாக்குறுதியாக இது இடம்பெற்றது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழக பட்ஜெட் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டாக இருப்பதால், பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு நடத்தும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு பிறகு, 2024ஆம் ஆண்டு முதல் பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாய் உயர்த்தி, தற்போது அவர்கள் 12,500 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
13 ஆண்டுகளுக்கு பின்பு, சம்பள உயர்வு கிடைத்தாலும் இன்னும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை செய்கின்றனர். வேலையும் தற்காலிக நிலையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதே பாடங்களை எடுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவதைப் போல, பகுதி நேர ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க, தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பில் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000 சம்பளம் வழங்க மத்திய அரசு 132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும். தமிழ்நாடு அரசு சார்பில் 2,500 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்க 33 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இதன்படி, 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை வழங்க மொத்தம் 165 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதை சிறப்பாசிரியர் அல்லது இடைநிலை ஆசிரியர் நிலைக்கான காலமுறை சம்பளமாக மாற்றினால், அடிப்படை சம்பளம் ரூ. 20,600 ஆக உயரும். அதாவது ஆண்டுக்கு 450 கோடி ரூபாய் தேவைப்படும். இந்தச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றால், அரசுக்கு ஆண்டுதோறும் இன்னும் 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும்.
2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியில் ரூ.300 கோடி அதிகமாக ஒதுக்க வேண்டும் என்றும் இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களுக்காக காலமுறை சம்பள வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்றும் எதிர்பார்க்கின்றனர்.
