TASMAC Scam: அமலாக்கத்துறை அறிக்கையின்படி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து, மார்ச் 17, 2025 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திமுக அரசு டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டதை அடுத்து, பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"டாஸ்மாக் நிறுவனம், மதுபான அமைச்சர் தொடர்புடைய இடங்கள் மற்றும் மதுபான விநியோக நிறுவனங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மாயையான அச்சங்களைப் பரப்பி வருகிறார்.

கணக்கில் வராத ரூ.1,000 கோடி பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பான மதுபான ஆலைகளிலிருந்து ஆவணங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

அமைப்பை மோசடி செய்வதன் மூலம் தங்கள் கட்சியின் கஜானாவை நிரப்புவதற்காக தி.மு.க. பொது மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த லஞ்சத்தைப் பெற்றதற்காக, மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. மார்ச் 17, 2025 அன்று சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊழல் நிறைந்த தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் பெருமளவில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்கென்றே நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1,000 கோடி ஊழல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

தி.மு.க. அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று, பா.ஜ.க. சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்."

இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் கூறியுள்ளார்.