இசைஞானி இளையராஜாவுக்கு விழா எடுக்கும் தமிழக அரசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு விழா எடுக்கவுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்திய முதல்வருக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார். லண்டன் நிகழ்ச்சி குறித்து முதல்வர் விசாரித்தார்.

Tamil Nadu government to hold a ceremony for Ilayaraja: CM MK Stalin sgb

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு விழா எடுக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தான் லண்டனில் நடத்திய சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்ற இளையராஜா முதல்வர் தன்னை வாழ்த்தி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, இசைக்கருவிகளை வாசித்த கலைஞர்கள் அனைவரும் எந்தவிதமான இசைக்கோர்வைகளையும் வாசிக்கும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் அதனால் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என்றும் தெரிவித்தார். சிம்பொனி அரங்கேற்றத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்களும் வந்து விசில் அடித்து ஆரவாரம் செய்தனர் என்றும்  புன்னகையுடன் இசைஞானி கூறினார்.

இந்தச் சந்திப்பு பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜா தன்னை வந்துச் சந்தித்த தருணத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். மேலும், இளையராஜாவுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் விழா எடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

"இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா தனது முதல் சிம்பனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்காக லண்டன் செலுவதற்கு முன்பு, முதல்வர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பிய இளையராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது சிம்பொன இசை நிகழ்ச்சி இன்னும் பல நாடுகளில் நடைபெற உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தால் இங்கேயும் இசை நிகழ்ச்சியை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios