ஜூலை 14 அன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதே போல .திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்

Tiruchendur Temple Kumbhabhishekham : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜூலை மாதம் 14 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜூலை மாதம் 14 அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு. மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும்,

திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம்

இத்திருக்கோயிலின் குடமுழுக்கிற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தாலும் அனைவரும் குடமுழுக்கை பார்க்கின்ற வகையில் சுற்றிலும் திருக்கோயிலை சுற்றிலும் எல்இடி அமைத்தல், பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றைவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். அந்த வகையில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் குடமுழுக்கு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 3.117 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கின்றன. அதில் 117 திருக்கோயில்கள் முருகன் திருக்கோயில்களாகும். பெருந்திட்ட வரைவு (மாஸ்டர் பிளான்) என்ற சொல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கொண்டுவரப்பட்டு வரலாறு காணாத அளவிற்கு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு 400 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஜுலை மாதம் 7 அன்று குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. அதற்கான பணிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம். இந்த குடமுழுக்கினை பிச்சை குருக்கள், ராஜா பட்டர், செல்வம் போன்ற அர்ச்சகர்கள் ஒருங்கிணைந்து சீரோடும் சிறப்புடன் நடத்துவதற்கு உறுதுணையாக உள்ளார்கள்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலே குடமுழுக்கு வெகு சிறப்பாக நடத்தப்பட்டு 98 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் 86 கோடி ரூபாய் செலவில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பெருந்திட்ட பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுவாமிமலையில் படியில் ஏறுவதற்கு பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்தூக்கி ஏற்பாடு செய்திருக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் 2000 நபர்களை அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அரசு மானியத்தோடு அழைத்துச் சென்று இருக்கின்றோம். இந்த ஆண்டு மேலும் 2000 மூத்த குடிமக்களை கட்டணம் அழைத்துச் செல்ல உள்ளோம். அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு 1085 கோடி ரூபாய் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழில் குடமுழுக்கு- அமைச்சர் சேகர்பாபு

தமிழ் கடவுள் முருகனுக்கு இந்த திராவிட மாடல் ஆட்சியில் பெருமை சேர்த்தது போல் எந்த ஆட்சியிலும் பெருமை சேர்க்கவில்லை என்பதற்கு முழு உதாரணமாக பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திகழ்கிறது. திருப்பரங்குன்றத்திற்கு கம்பிவட ஊர்தி ( ரோப் கார்) அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்குகு அரசு நிதி ஒதுக்கி இருக்கின்றது. ஆகவே, கூடிய விரைவில் ரோப் கார் அமைப்பதற்கான டெண்டர் கோரப்படும். இன்னார் இனியவர் என்று இல்லாமல் கோரிக்கைகள் எங்கிருந்து வரப் பெற்றாலும் அவற்றை நிறைவேற்றுகின்ற முதல்வராக திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் திகழ்கிறார். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழனியிலே தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. தமிழிலே குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவித்ததோடு. தமிழிலே குடமுழுக்கை நடத்தி காட்டினோம். மருதமலை முருகனுக்கும் இதேபோல் தமிழிலே குடமுழுக்கு நடத்தினோம் .

இன்னார் சொல்லி தான் நாங்கள் நடத்த வேண்டும் என்பது அல்ல. பிச்சை குருக்கள், ராஜா பட்டர். செல்வம் போன்ற குருக்கள்கள். துறை செயலாளர், ஆணையர் என அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழிலே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றோம். தானாக நடைபெறப் போகின்ற ஒன்றை நாங்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகை என்ற பிறகு தான் நடந்ததாக சிலர் கூறுவது தானாக கனிந்த கனியை எங்களுடைய மந்திர சொற்களால் தான் கனிந்தது என்று கூறுவது போல் இருக்கிறது. திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்பவர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவீதத்தை அர்ச்சகர்களுக்கே வழங்கியதோடு, 13 போற்றி புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட ஆட்சி இந்த ஆட்சியாகும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் நமது முதலமைச்சர் அவர்களின் கொள்கையாகும். ஆகவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பொறுத்த அளவில் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும், அரசியல் சார்புடையவர்களையும் அழைக்கவில்லை. மதச்சார்புடைய எந்த விதமான அடையாளமும் நாங்கள் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் அறநிலையத்துறையின் பணியாக மேற்கொண்டோம். 

மதுரையில் முருகர் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

இந்த மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள். ஆன்றோர் சான்றோர் பெருமக்கள், அடியார்கள். உண்மையான முருகர் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். அது அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட மாநாடாகும். முழுக்க முழுக்க முருகர் பக்தர்கள் நடத்தப்பட்ட மாநாடு மதுரையில் நடத்தப்படும் மாநாடு அரசியல் நோக்கத்தோடு அரசியலில் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு என்பதனை தயவு செய்து ஊடகத்துறையினர் இதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். 

அதையும் மாநாடு, இதையும் மாநாடு என்றால் பழனியிலே நடைபெற்ற மாநாட்டிற்கு என்ன பெயர் வைப்பது. ஆகவே எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகின்ற எங்களுடைய முதல்வர் அவர்கள், அந்தந்த மதத்தினர் அவர்களுடைய வழிபாட்டிற்கு அமைதியான சூழல் வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த வழியில் அமைதியாக அவர்களின் வழிபாடு நடத்த வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.

மதத்தால், இனத்தால், மொழியால், மக்களை பிளவுபடுத்த ஒரு போதும் இந்த மண்ணிலே திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் இடம் தர மாட்டார். முருகர் பக்தர்களும் இதை நன்றாக உணர்ந்துள்ளார்கள் அதன் முடிவு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கொண்டு வந்தோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.